திருவாரூர் மாவட்டத்தில் அடுத்தாண்டு ரூ.2,320 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கை யை கலெக்டர் வெளியிட்டார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வங்கியாளர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றுமுன்தினம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் நடராஜன் தலைமை வகித்தார்.
இதில் மாவட்டத்தில் வரும் 2014-2015 ஆண்டிற்கான வளர்ச்சி சார்ந்த கடன் திட்டமாக பயிர் கடன் வழங்குவதற்காக ரூ.1,253 கோடி, விவசாயம் சார்ந்த தொழில்களுக்காக ரூ.781 கோடி, சிறு மற்றும் குறுந்தொழிலுக்காக ரூ.89 கோடி மற்றும் இதர முக்கிய பிரிவுக்காக ரூ.197 கோடி என மொத்தம் 2,320 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையினை கலெக்டர் நடராஜன் வெளியிட்டார். அதை ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் வெங்கடேஷ், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரவிசங்கர், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் சிவசாமி, முன்னோடி வங்கி மேலாளர் காமராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் கலெகடர் நடராஜன் பேசியது:
விவசாயம் சார்ந்த மாவட்டமாக இருந்து வரும் திருவாரூர் நெல் உற்பத்தியில் மாநிலத்தின் மிக முக்கிய பங்கினை வகித்து வருகிறது. எனவே இயந்திரங்கள் மூலம் விவசாய பணிகளை மேற்கொள்ளும் போது நேரம் மிச்சப்படுவதுடன், உற்பத்தியும் பல மடங்கு அதிகரித்து வருவதால் வேளாண்மை சார்ந்த இயந்திரங்கள் வாங்குவதற்கும், விவசாயம் சார்ந்த தொழில்களான கறவை மாடுகள் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, பரண்மேல் ஆடு வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணை அமைப்பது, கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு உள்ளிட்ட அனைத்து கிராமப்புற மக்களின் மேம்பாட்டு பணிகளுக்காகவும் இந்த வளர்ச்சி சார்ந்த கடன் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொழில்களுக்கு சாதகமான வாய்ப்புகள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனை வோரை தேர்வு செய்து அதில் தகுதியுள்ள தொழில் முனைவோரை கண்டறிந்து அவர்களுக்கு வங்கியாளர்கள் கடன்களை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் நடராஜன் பேசினார்.

Post a Comment