முத்துப்பேட்டையில் அ.தி.மு.க.பிரமுகரின் வாகனம் தீ வைத்து எரிப்பு.
முத்துப்பேட்டை திமிலத்தெரு தேனா சீனா காலனியில் வசிப்பவர் அயூப்கான்(42). இவர் 7-வது வார்டு அம்மா பேரவை செயலாளராக உள்ளார். இவரது தந்தை சுல்தான் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சிறுபாண்மை பிரிவு மாவட்டச் செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில் அயூப்கான் நேற்று முன்தின இரவு முத்துப்பேட்டை கடைத்தெருவுக்கு சென்றுவிட்டு இரவு 8 மணிக்கு தனது டூவீலரை வீட்டு காம்பவுண்ட் சுவருக்குள் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டார். அப்பொழுது அவரது பைக் அருகில் சைக்கிள் ஒன்றும் இருந்தது. இந்த நிலையில் அதிகாலை 2 மணி அளவில் வீட்டு அருகில் நாய்கள் சத்தம் கேட்டுள்ளது.
அப்பொழுது காலனி வீட்டு காம்பவுண்ட் சுவரிலிருந்து ஏறி குதிக்கும் சத்தம் கேட்டதை அறிந்த அயூப்கான் வெளியில் வந்து பார்த்தபோது தனது டூவீலரும் சைக்கிளும் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடன் அவரும் அக்கம்பக்கத்தினரும் தீயை அணைக்க முயற்சி செய்தனர் முடியவில்லை. அதனால் டூவீலரும் சைக்கிளும் முழுவதும் எரிந்து சாம்பலாகியது. மேலும் வீடு வெளிப்புற கட்டிடமும் காலனி வீடுகளுக்கு இணைப்பு உள்ள மின்சார மீட்டர்களும் எரிந்து நாசமானது.
இது குறித்து அ.தி.மு.க. பிரமுகர் அயூப்கான் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்அபெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.
அதிமுக நிர்வாகி அயூப்கான் கூறுகையில் :
எனக்கு தொடர்ந்து பல்வேறு வகையில் மிரட்டலும் அச்சுறுத்தலும் வருகிறது. இந்த நிலையில் எனது வாகனத்தை யாரோ மர்ம நபர் தீ வைத்து விட்டு ஓடிவிட்டனர். காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Post a Comment