திருவாரூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாற்று திறனாளிகள் 7 பேருக்கு ரூ.3 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான 3 சக்கர பைக்குகளை எம்.பி விஜயன் வழங்கினார்.
நாகை எம்பி விஜயனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர பைக் வழங்கும் விழா நேற்று திருவாரூரில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. டி.ஆர்.ஒ மணிமாறன் தலைமை வகித்தார். மாற்றுதிறனாளிகள் நலத் துறை மாவட்ட அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் மாற்று திறனாளிகள் 7 பேருக்கு தலா ரூ.54 ஆயிரம் மதிப்பிலான 3 சக்கர பைக்குகளை எம்.பி விஜயன் வழங்கி பேசுகையில், மாற்றுதிறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் முதன்முதலாக நான் கோரிக்கை வைத்ததன் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வரையில் மாற்றுதிறனாளிகளுக்கு நிதி உதவி செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முதலாக நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கை தி.மு.கவை சேர்ந்த ஒருவர் மூலம் நிறைவேறியிருப்பது தலைவர் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றியாகும்.
இதுபோல் 3 சக்கர பைக்குகள் மொத்தம் 18 பேருக்கு வழங்க நிதி ஒதுக்கப்பட்டு, அதில் 11 பேருக்கு நாகை மாவட்டத்திலும், 7 பேருக்கு திருவாரூர் மாவட்டத்திலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். விழாவில் திருவாரூர் நகர திமுக செயலாளர் சங்கர், நகராட்சி கவுன்சிலர் அசோகன், ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment