முத்துப்பேட்டை அக் - 18
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான ஏராளமான தேக்கு மரங்கள் உள்ளது. இதனை அடிக்கடி திருட்டு கும்பல்ங்கள் வெட்டி கடத்தி வந்தனர். மேலும் வெட்டப்படும் தேக்கு மரங்களை அருகில் உள்ள குளங்களில் துண்டு துண்டாக வெட்டி போட்டு பிறகு அதனை கடத்தி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் நாச்சிக்குளம் பகுதியில் தேக்கு மரங்களை வெட்டி கடத்தி வருவதாகவும், அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் வெட்டப்பட்ட தேக்கு மரங்களைப் பதுக்கி வைத்திருப்பாகவும் முத்துப்பேட்டை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதனை அடுத்து வனத்துறை ரேஞ்சர் ராதாகிருஷ்ணன், பாரஸ்ட் அயூப் கான் ஆகியோரது தலைமையில் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட நாச்சிக்குளம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்பொழுது தேக்கு மரம் வெட்டி கடத்திக் கொண்டிருந்த கும்பல் தப்பிக்க முயற்சித்தனர். அப்பொழுது கடத்தல் கும்பலைச் சேர்ந்த மாதவன்(25), விஜயகுமார்(33), ராஜேந்திரன்(35) ஆகியோரை வனத்துறையினர் மடக்கிப்பிடித்தனர். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.
இதில் தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான ரவி, ரமேஷ் உட்பட கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கடத்தல் கும்பலிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள தேக்கு மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment