உண்மை குரல் ! ! அதிகார குரல் ! !

முத்துப்பேட்டை லகூன் சுற்றுலாப் பகுதி

முத்துப்பேட்டையில் சதுப்பு நிலக்காடுகள் (லகூன்) அமைந்துள்ளது தனித்தனித்தீவுகளாக காட்சியளிப்பது முத்துப்பேட்டையின் சிறப்பம்சமாகும். உலகின் பல்வேறு பகுதியிலிருந்து பலவகைப் பறவை இனங்கள் குறிப்பிட்ட சில காலங்களில் இங்கு வந்து தங்கி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறது. 


அலையாத்திக் காடு  :
அலையாத்திக் காடு (அல்லது சதுப்புநிலக் காடு, mangrove) என்பது கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் உவர் நீரில் வளரும் மரங்களும் புதர்ச்செடிகளும் உள்ள காடு. இக்காட்டிலுள்ள மரங்கள் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால் இக்காடுகள் அலையாத்திக் காடுகள் எனப்படுகின்றன. நிலமும் கடலும் சேரும் பகுதிகள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும் சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்திக் காடுகள் எனப்படுபவை இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இக்காடுகள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

வேறு பெயர்கள் :
ஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள் எனப்படுகின்றன. மலாய், எசுப்பானியம், போர்ச், சுவிசு மொழிகள் இணைந்த சிறுமரங்கள் எனப்பொருள்படும் மாங்கு என்ற சொல்லில் இருந்தே மாங்குரோவ் காடுகள் என்ற பெயர் ஏற்பட்டது. இக்காடுகளுக்கு வெள்ளக்காடு என்றொரு பெயரும் உண்டு. முல்லையும் மருதமும் நெய்தலும் சந்திக்கின்ற திணை மயக்கமாக சதுப்புநில வனங்கள் திகழ்கின்றன. கண்டல் மரங்கள் இருக்கும் சதுப்பு நிலப்பகுதியை கண்டல் காடுகள் எனவும் சதுப்பளக் காடுகள் எனவும் கூறலாம்.

இந்தியாவில் அலையாத்திக் காடுகள் :
கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடு. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும். கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள் - இவை தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.

மேலும் குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளிலும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்றன.
கண்டல்கள் உப்பைத் தாங்கவல்ல தாவரங்கள்; இவை பெரும்பாலும் வெப்ப மண்டல, மித வெப்ப மண்டலப் பகுதிகளில் கடலோரக் கழிமுகங்களில் காணப்படுகின்றன. இவை ஆழம் அதிகமில்லாத சதுப்பு நிலத்திலும் உவர்நீரிலும் வளரும் மரங்கள் அல்லது புதர்கள். வற்றுப்பெருக்க அலையின் வீச்சு, வண்டல் படிவு, உறைவிடப்பகுதி, இவற்றைத் தவிர களிமண்-பாங்கான அடித்தளம் உள்ள இடத்தில் தான் கண்டல்கள் வளர்வன என்பதால் மணற்பாங்கான அல்லது பாறைகள் நிறைந்த கரையில் இவை வளராது.

அருகில் உள்ள சுற்றுலா தளங்கள் :
70 கி.மீ. தொலைவில் தஞ்சாவூரும், 29 கி.மீ. தொலைவில் மல்லிபட்டினமும் தென் கிழக்கு முனையில் கோடியக்கரையும் சுற்றுலா தளங்களாக அமைந்துள்ளது.

Post a Comment

 
Support : Google Chrome | Firefox | Internet Explore
Copyright © 2013. முத்துப்பேட்டை குரல் - All Rights Reserved
Developed And Designed by Riyas
Proudly powered by Cybez Tech